WhatsApp செயலியைத் தொடங்கிய நாளில் இருந்தே, நண்பர்களுடன் நீங்கள் தொடர்பில் இருப்பதற்கும், இயற்கைப் பேரிடர்களின்போது முக்கியமான தகவல்களைப் பகிர்வதற்கும், பிரிந்திருக்கும் குடும்பத்தினருடன் ஒன்றிணைவதற்கும், வாழ்வை இன்னும் சிறப்பாக்குவதற்குமான செயலியாக அதைக் கட்டமைத்து வருகிறோம். உங்கள் தனிப்பட்ட தருணங்கள் WhatsApp வழியாகப் பகிரப்படுகின்றன, இந்தக் காரணத்தாலேயே எங்கள் செயலியில் முழு மறையாக்கத்தைக் கட்டமைத்துள்ளோம். முழு மறையாக்கம் செய்யப்பட்டுள்ளபோது, உங்களின் செய்திகள், புகைப்படங்கள், காணொலிகள், குரல் செய்திகள், ஆவணங்கள், அழைப்புகள் ஆகியவை முறைகேடாகப் பயன்படுத்தப்படாத வகையில் பாதுகாக்கப்படுகின்றன.
WhatsApp Messenger வழியாக மற்றொருவருக்கு நீங்கள் செய்தி அனுப்பும்போது WhatsApp அதை முழு மறையாக்கம் செய்து பாதுகாக்கிறது. முழு மறையாக்கம் செய்யப்படுவதால், நீங்களும் நீங்கள் யாருடன் தொடர்புகொள்கிறீர்களோ அவரும் மட்டுமே உங்களுக்கிடையிலான தகவல்தொடர்புகளைப் படிக்கவோ கேட்கவோ முடியும். WhatsApp உட்பட வேறு எவராலும் அவற்றைப் படிக்கவோ கேட்கவோ முடியாது. முழு மறையாக்கம் செய்யப்படுவதால் உங்கள் செய்திகள் பத்திரமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நீங்களும் உங்கள் செய்தியைப் பெறுபவரும் மட்டுமே அவற்றைப் படிப்பதற்கான தனிப்பட்ட சாவியைக் கொண்டிருப்பீர்கள். இவை எல்லாமே தானாகவே நடக்கும்: அமைப்புகளில் எதையும் இயக்கத் தேவையில்லை, உங்கள் செய்திகளைப் பாதுகாப்பதற்கு தனிப்பட்ட ரகசிய அரட்டைகளை உருவாக்கத் தேவையில்லை.
உங்கள் சாதனத்தில் இருந்து செய்திகள் அனுப்பப்படுவதற்கு முன்னர் அவற்றைப் பாதுகாக்கும் 'சிக்னல் மறையாக்க நெறிமுறை' மூலம் ஒவ்வொரு WhatsApp செய்தியும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு WhatsApp பிசினஸ் கணக்கிற்கு நீங்கள் செய்தி அனுப்பினால், அந்த பிசினஸ் தேர்வுசெய்த எண்ணுக்கு உங்கள் செய்தி பாதுகாப்பாகச் சென்றடையும்.
WhatsApp Business செயலியைப் பயன்படுத்தும் அல்லது வாடிக்கையாளரின் செய்திகளைத் தாங்களே நிர்வகித்து சேகரிக்கும் பிசினஸ்களுடனான அரட்டைகள் முழு மறையாக்கம் செய்யப்பட்டுள்ளதாக WhatsApp கருதுகிறது. செய்தி சென்றடைந்ததும், அது அந்த பிசினஸின் தனிப்பட்ட தனியுரிமை நடைமுறைகளுக்கு இணங்கக் கையாளப்படும். செய்திகளைச் செயலாக்குவதற்கும் அவற்றுக்குப் பதிலளிப்பதற்கும் தகுந்த பணியாளர்களையோ பிற தரப்பினரையோ கூட அந்த பிசினஸ்கள் பணியமர்த்தக்கூடும்.
செய்திகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கும், வாடிக்கையாளர்களுக்குப் பதிலளிப்பதற்கும் WhatsApp-இன் தாய் நிறுவனமான Facebook-ஐ சில பிசினஸ்கள்1 தேர்வு செய்யலாம். அவர்களின் தனியுரிமைக் கொள்கைகள் பற்றி மேலும் விவரமறிய, சம்பந்தப்பட்ட பிசினஸ்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பிட்ட சில நாடுகளில் WhatsApp பேமெண்ட்ஸ் கிடைக்கப்பெறுகிறது. இது நிதி நிறுவனங்களில் உள்ள கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றங்களைச் செய்வதில் உதவிடும். கார்டு எண்களும், வங்கி எண்களும் உயர் பாதுகாப்பு கொண்ட நெட்வொர்க்கில் மறையாக்கம் செய்யப்பட்டு சேமிக்கப்படுகின்றன. எனினும், பேமெண்ட்கள் தொடர்பான தகவல்கள் இல்லாமல் நிதி நிறுவனங்களால் பணப்பரிமாற்றங்களைச் செயலாக்க முடியாது என்பதால், பேமெண்ட்கள் முழு மறையாக்கம் செய்யப்படுவதில்லை.
உங்கள் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டுமென WhatsApp விரும்புகிறது. தனிநபர் ஒருவரிடமிருந்தோ ஒரு பிசினஸிடமிருந்தோ செய்திகளைப் பெற வேண்டாமென நீங்கள் விரும்பினால், நேரடியாக அவர்களை உங்கள் அரட்டையில் இருந்து நீங்கள் தடுத்துவிடலாம் அல்லது அவர்களை உங்கள் தொடர்புப் பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். உங்கள் செய்திகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதிலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான விருப்பங்கள் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
Open Whisper Systems உடனான கூட்டிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள WhatsApp-இன் முழு மறையாக்கம் தொடர்பான விரிவான தொழில்நுட்ப விளக்கத்தைப் படியுங்கள்.
பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளுக்கு, பாதுகாப்பு ஆலோசனைகள் பக்கத்தைப் பாருங்கள்.
1 2021ஆம் ஆண்டில்.